குஜராத்துக்கு மட்டும் நீங்க பிரதமர் இல்ல மோடி.... கே.எஸ் அழகிரி விளாசல்!

 
ks alagiri


மத்திய அரசு குஜராத் மாநிலத்திற்கு மட்டும் முன்னுரிமை காட்டுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நிதி ஒதுக்குவதில் இருந்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை வரை குஜராத்துக்கு அள்ளிக் கொடுப்பதை மோடி அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய பிரதமர் குஜராத்துக்கு மட்டும் சாதகமாக செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. மோடியின் இத்தகைய செயல் குஜராத் சட்டப்பேரவையில் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்த 350 சதவீதம் அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ks alagiri

2019 - 20 ஆம் ஆண்டு வரை குஜராத்தில் திட்டங்களை செயல்படுத்தும் ஏஜென்சிகளுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி அனுப்பியுள்ளது. ரூபாய் 839 கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்கி இருக்கிறது. ஒரு சில நெருங்கிய தொழிலதிபர்களுக்கு மோடி அரசு சாதகமாக செயல்படுகிறது என ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதை நிரூபிக்கும் விதமாக உள்ளது. 

குஜராத் அரசின் நிதி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் இந்திய தலைமை தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜோதி சிஎன்சி நிறுவனத்துடன் பாஜகவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரதமர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானவர். ஆனால் குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் செயல்பட்டு அங்குள்ள தொழிலதிபர்களுக்கு நேரடியாக நிதி வழங்குவது உறுதிமொழியை மீறும் செயல். அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்க வேண்டும். தேசிய வளர்ச்சி குழு செயல்படாமல் மோடி அரசு முடக்கி விட்டது. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்கள் சார்ந்த குஜராத் மாநிலத்திற்கு மட்டும் முன்னுரிமை காட்டுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. மோடி அரசு அதற்கான விலையை கொடுத்தே தீரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.