21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியா?- கே.எஸ்.அழகிரி பதில்
திமுக காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடைபெற்றதாக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவிலாயத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு , ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “டெல்லியிலிருந்து வந்த தலைவர்கள், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளித்தது. 40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுகவை எப்படி வீழ்த்துவது என முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது. ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது தொடர்பாகவும் பேசப்பட்டது. 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி என்ற செய்தி பொய்யானது” என்றார்.
21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவராக விருப்பம் தெரிவித்த செய்தி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து லீக் ஆனது தான் என செய்தியாளர்கள் கூறியதற்கு, காமராஜர் கட்டிய கட்டிடம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் லீக் ஆகாது என கே.எஸ்.அழகிரி பதிலளித்தார்.