ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. பிரதமர் மோடியை ரவுண்ட் கட்டி விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள்

 
மோடி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி அடைந்ததை குறிப்பிட்டு, பிரதமர் மோடியை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 77.50ஆக வீழ்ச்சி கண்டது. ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியை குறிப்பிட்டு, பிரதமர் மோடி மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி ஜி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் போது நீங்கள் மன்மோகன் ஜியை விமர்சித்தீர்கள். இப்போது ரூபாய் மதிப்பு மிகக் குறைவாக உள்ளது. ஆனால் நான் உங்களை விமர்சிக்க மாட்டேன். ஏற்றுமதியாளர்களுக்கு மூலதனத்தை அளித்து வேலைகளை உருவாக்க உதவினால் ஏற்றுமதிக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நல்லது. நமது பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்க, தலைப்பு செய்திகளில் அல்ல என பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 77.41ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாய் மதிப்பு ஐ.சி.யூ.வில் உள்ளது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாய் பா.ஜ.க.வின் மார்க்தர்ஷக் மண்டல் வயதை கடந்து விட்டது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாய் மதிப்பு  பிரதமர் வயதை தாண்டியும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு காரணங்கள் என்ன? என பதிவு செய்துள்ளார்.

ராகுல் காந்தி

நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மல்லிகார்ஜூன் கார்கே டிவிட்டரில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. முதல்வர் மோடி, அரசை தேச விரோத என்று திட்டியிருப்பார். பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என பதிவு செய்துள்ளார்.