’’கேரள, புதுச்சேரி முதல்வர்களும் இவ்வாறு அறிவிக்குமாறு தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் வைக்க வேண்டும்..’’

 
c

 மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்  பெ. மணியரசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், வரும் 6.01.2022 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு - மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்  ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு முடிவெடுக்கப்பட்டது. 

cc
 
இது தொடர்பாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,  ‘’மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கு இந்திய அரசின் நீர்வளத்துறை ஏற்கெனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்று 22.12.2021 அன்று கர்நாடக சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.  சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த பொம்மை, “மேக்கேத் தாட்டில் 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கெனவே ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலைப் பெற முயன்று வருகிறோம். மேக்கேத்தாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். 27.12.2021 அன்று நடைபெறும் கூட்டத்தில் மேக்கேத்தாட்டு அணைக்கு மேலாண்மை ஆணையம் அனுமதி அளிக்கும்; அதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது” என்று கூறினார்.

இப்போதுள்ள கர்நாடக அணைகளிலிருந்து வெளியேறும் மிகை வெள்ள நீரைத் தேக்கித் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுவோம் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு பொய்! வரலாறு காணாத மழையும் வெள்ளமும் வந்த நடப்பு ஆண்டில்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் தரவில்லை.

 மேக்கேத்தாட்டு அணை கட்டினால் - தமிழ்நாட்டில் 26 இலட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலை வனமாகிவிடும். சென்னை, இராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குக் குடிநீர் கிடைக்காது.

 கர்நாடகத்தின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில், 10.01.2022 அன்று பெங்களுருவில் தொடங்கி பத்து நாட்கள் பல ஊர்கள் வழியாக பேரணியாகச் சென்று 19.01.2022 அன்று மேக்கேத்தாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். பா.ச.க. ஆட்சிகள் மேக்கேத்தாட்டு அணையை விரைந்து கட்ட முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்திய அரசின் துணையோடு மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கு முயற்சிகள் கர்நாடகத்தில் நடக்கும்போது, இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது நீராற்றல் துறை அமைச்சர் எந்தக் கருத்தும் கூறவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை என்பது உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

s
 
காவிரி மேலாண்மை ஆணையமும் தனது 27.12.2021 கூட்டத்திற்கான பொருள் நிரலில் (அஜென்டாவில்) மேக்கேத்தாட்டு அணை அனுமதி குறித்து பேசுவது என்று சேர்த்து அறிவித்தது. (பின்னர் அக்கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது). காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் செயலாக்கப் பொருள் நிரலில் (அஜண்டாவில்) மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்கலை வைத்து வருகிறது.

ஏற்கெனவே பல கூட்டங்களில் மேக்கேத்தாட்டைப் பொருள் நிரலில் வைப்பதைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்த்து, அது பொருள் நிரலில் விவாதிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. அப்போக்கை,  தமிழ்நாடு அரசு கண்டனம் செய்ததில்லை. இப்பொழுது மீண்டும் 27.12.2021 கூட்டத்திற்கான பொருள் நிரலில் காவிரி மேலாண்மை ஆணையை அதிகாரிகள் சேர்த்திருப்பதிலிருந்தே, மோடி ஆட்சி, சட்ட விரோத - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விரோத - மேக்கேத்தாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறது என்ற உண்மை அம்பலமாகிறது.

மேக்கேத்தாட்டு அணை அனுமதியைப் பொருள் நிரலில் முன்வைத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவைத் தமிழ்நாடு முதலமைச்சர் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். புதுச்சேரி, கேரள முதல்வர்களும் இவ்வாறு அறிவிக்குமாறு தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் வைக்க வேண்டும்.’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.