என்னை பரிசோதிக்க கொரோனா உள்ள நபரை அனுப்பினாங்க.. பா.ஜ.க. அரசு மீது சிவகுமார் குற்றச்சாட்டு
எனக்கு கொரோனா தொற்று ஏற்பட வேண்டும் என்று எண்ணத்தில், பா.ஜ.க. அரசு கொரோனா நேர்மறை உள்ள ஒரு நபரை என்னை பரிசோதிக்க அனுப்பினார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் மேகதாது குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அம்மாநில அரசை வலியுறுத்தி காங்கிரஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 11 நாள் பாதயாத்திரை தொடங்கினர். கோவிட் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், அதனை புறந்தள்ளிவிட்டு காங்கிரஸார் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதனையடுத்து கோவிட்-19 விதிமுறைகளை மீறியதாக பல காங்கிரஸ் தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பாதயாத்திரைக்கு பின் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மறுத்து விட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னை பரிசோதிக்க வந்த கூடுதல் மாவட்ட ஆணையருக்கு கோவிட் பாசிட்டிவ். எனக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், நேர்மறை சோதனை நடத்தவும் அவர் அனுப்பப்பட்டார். கோவிட் பாசிட்டிவ் நபருடன் என்னை முதன்மை தொடர்பு கொள்ள வைக்க அரசு விரும்புகிறது. அதனால்தான் அந்த அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார்.
இது முதல்வரின் யோசனையாக இருக்காது. ஆனால் சுகாதாரத் துறை அமைச்சர் (கே.சுதாகர்) அதை செய்ய வல்லவர். எனது குடும்பத்தில் சுமார் டஜன் டாக்டர்கள் உள்ளனர். எனது குடும்பத்தில் பல குழந்தைகள் மருத்துவம் படிக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் எப்படி சோதனை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இவையனைத்தும் பா.ஜ.க. பாசிட்டிவ், பா.ஜ.க. கோவிட், பா.ஜ.க. ஒமைக்ரான். இந்த கோவிட்-19 எண்கள் (பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை) குறித்து நீதித்துறை விசாரணையை நான் கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.