30% இடங்கள் கேட்ட பாஜகவுக்கு 15% வழங்கும் அதிமுக
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக- பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார்,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னாள் மாநில தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக திருப்பூர்,நெல்லை,நாகர்கோவில், கோவை, ஆகிய நான்கு மாநகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்க பாஜக தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறது. ஆனால் அந்த இடங்களை ஒதுக்க அதிமுக முன்வரவில்லை. அதன் காரணமாகவே பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 30 சதவீதத்துக்கும் மேலான நகராட்சி மற்றும் பேரூராட்சி இடங்களை தங்களுக்கு வழங்க பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் 15 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.