மாஜிக்கு சீக்ரெட் அசைன்மென்ட் கொடுத்த எடப்பாடி
அதிமுக இன்றைக்கு கவுண்டர் கட்சி, முக்குலத்தோர் கட்சி என்று விமர்சிக்கும் அளவுக்கு போய்விட்டது. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை முழுவதுமாக ஆக்கிரமித்து விட்ட பின்னரும், டெல்டா அதிமுக என்பது அவருக்குஇன்னமும் சவாலாகவே இருக்கிறது.
பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து இருக்கிறார்கள். இவர்களுடன் சசிகலாவும் இணையவிருக்கிறார். இந்த மூன்று பேரும் இணைந்தால் டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக தென் மாவட்டங்கள் இவர்கள் வசமாகிவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் இல்லை . அதனால் தான் தென் மாவட்டங்களில் இவர்களை மீறி தனது பலத்தை நிரூபிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார் .
ஓபிஎஸ்க்கு பக்கபலமாக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். அண்மையில் நடந்த திருச்சி மாநாட்டில் கூட வைத்திலிங்கத்தின் பங்கு தான் மிக முக்கியமானது என்கிறார்கள். இதனால் வைத்திலிங்கத்திற்கு எதிராக களத்தில் ஆள் இறக்கவேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார் எடப்பாடி. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக ஒரத்தநாடு , மதுக்கூர் பகுதிகளில் வைத்திலிங்கத்தின் மவுசு தான் இருக்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிமுக நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது .
வைத்திலிங்கத்தை எதிர்த்து அந்தப் பகுதிகளில் அரசியல் செய்யக்கூடிய நிர்வாகிகளை நியமிக்க ஆலோசித்து வருகிறார் எடப்பாடி. ஓபிஎஸ் அணியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணம் செலவு செய்யும் நபராகவும் உள்ளார் வைத்திலிங்கம் . இதனால் அவருக்கு ஆட்டம் காட்டி தென் மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் தனது கொடியை பறக்க விட தனது அணியில் இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். காமராஜுக்கு சீக்ரெட் அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார் எடப்பாடி.
ஜானகி அணியில் இருந்து பின்னர் சசிகலா சகோதரன் திவாகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர் . ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பக்கம் சென்று விட்டார். வைத்திலிங்கத்தை சமாளிக்கும் திறமை காமராஜ்க்கு இருக்கிறது. கட்சியினருக்கு பணம் செலவு செய்து சமாளிக்கும் வலிமையும் காமராஜ்க்கு இருக்கிறது என்பதை உணர்ந்துதான் அவருக்கு அந்த அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார் எடப்பாடி.
இவர் தஞ்சாவூரில் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி பல விஷயங்களை அரங்கேற்ற இருக்கிறார் . ஒரத்தநாடு, மதுக்கூர் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அந்த நிர்வாகிகள் வைத்திலிங்கத்திற்கு எதிராக அதிரடியாக நடக்க வேண்டும். அதே நேரம் திடீரென்று அவர்கள் சசிகலாவுக்காகவோ வைத்திலிங்கத்திற்காகவோ பன்னீர் செல்வத்திற்காகவோ அணி மாறிவிடக்கூடாது என்பதால் அப்படிப்பட்ட ஆட்களாக பார்த்து நியமிக்க விரும்புகிறாராம் எடப்பாடி.
அந்த புதிய நிர்வாகிகள் பட்டியலை எடப்பாடி தயார் செய்து வைத்திருக்கிறாராம். காமராஜ் மூலமாகவே அந்த புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கிறதாம். விரைவில் இந்த பட்டியலை அறிவிக்க இருக்கிறார் எடப்பாடி.