சசிகலாவுடன் இணைகிறார்! எடப்பாடியின் சாணக்கியத்தனம் -ஜெ., உதவியாளர் போட்ட புதுகுண்டு
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா. அடுத்து முதல்வராகவும் ஆக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் மறைவை அடுத்து முதல்வராக பதவி ஏற்றி இருந்த பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்தார். இதனால் சசிகலாவை எதிர்த்து அவர் தர்மயுத்தம் தொடங்கினார்.
அந்த நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல வேண்டியது இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. அவர் சிறைக்கு சென்ற பின்னர் பன்னீர்செல்வத்தை அதிமுகவுக்குள் கொண்டு வந்தார் பழனிச்சாமி. இரட்டை இலை சின்னத்திற்கு பாதகம் இல்லை என்று ஆனவுடன், கட்சி தன் தனது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக வந்தவுடன் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்றினார். சசிகலாவையும் கட்சியை விட்டு வெளியேற்றினார். டிடிவி தினகரனையும் கட்சியிலிருந்து வெளியேற்றினார்.
இதனால் டிடிவி தினகரன் அமமுக என்று தனிக்கட்சி தொடங்கிவிட்டார். பழனிச்சாமி தன்னை சேர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்த்து இருந்த பன்னீர்செல்வம் இனி அது நடக்காது என்று தெரிந்ததும் டிடிவி தினகரனுடன் கைகோர்த்து இருக்கிறார். பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் கைகோர்த்து இருப்பதால் அவர்கள் சார்ந்த சமுதாய வாக்குகள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்காது என்று எடப்பாடி தரப்பு கருதுகின்றது. இதனால் பன்னீர்செல்வம் தினகரனை சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் சசிகலாவை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு அந்த சமுதாய வாக்குகளை பெற்று விடலாம் என்று கணக்கு போடுகிறதாம் எடப்பாடி தரப்பு.
இது குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதில்,
’’அரசியலை நான் அன்னையிடமிருந்து கற்றுக் கொண்டவன். நான் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு காரணம் உண்டு. ஆன்மீக பதிவை போட்டாலும் சிலர் அரசியல் பதிவாக பதிலளிக்க தொடங்கி விடுகிறார்கள். சிலர் நான் போட்ட பதிவை சரியாக படிக்காமல் வேறாக யூகித்துக் கொண்டு அவர்கள் மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மா அவர்களை புகழ்ந்து பாடும் பதிவுகளிலும் சம்பந்தமே இல்லாமல் கம்பி சுற்றுவதுதான் வேதனை. நான் போடும் பதிவுகளை பார்த்து தலைவர்களே கோபப்பட மாட்டார்கள். நீங்கள் கோபப்படுவது தான் ஆச்சரியம்! பலருக்கு அம்மாவை மறக்க மனம் இல்லை என்றாலும் இன்றைய தலைவர்களை குஷிப்படுத்துவதற்காக அம்மாவை மறந்தது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் தலைவர்கள் பல பாதைகளை கடந்து வந்தவர்கள். முகநூலில் ஆதரவு பதிவை போட்டு அவர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்து விடாதீர்கள்.
உங்களைப் போன்று பலரைப் பார்த்தவர்கள் அவர்கள். ஒரே நாளில் அவர்கள் தலைவர்களாக ஆகிவிடவில்லை. எல்லாவற்றையும் கடந்து தான் தலைவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். களத்தில் இறங்கிப் போராடுங்கள். எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். அது உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு சொல்லும். எதிரிகளை எதிர்க்கப் பயப்படும் நீங்கள் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எதிர்த்து கொண்டிருக்கிறீர்கள்’’என்கிறார்.
அவர் மேலும், ‘’இன்றைய அரசியல் சூழ்நிலை குழப்பமாகவே இருக்கிறது. யாருக்கு யார் ஆதரவு? யாருக்கு யார் எதிரி? என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. வெளிப்படையாக எதிரிகளாக தெரிபவர்கள் கூட ரகசியமாக பேசிக் கொள்கிறார்களாம். தன் நலத்திற்காக எதையும் செய்து கொள்ளத் தயாராகிவிட்டார்கள். காற்று அடிக்கும் திசையில் பயணிக்க காத்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அவர்களும், ஈபிஎஸ் அவர்களும் இணைவார்கள் என்று பார்த்தால் ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள். இணைவதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டு வருவதாகவே பலர் பேசவும் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அடிமட்ட தொண்டர்களோ இன்று கூட எல்லோரும் சேர்ந்தால் பலமாக இருக்கும் என்று தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
நடப்பவற்றை கூர்ந்து கவனித்தால் மற்றவர்களை புறம் தள்ளிவிட்டு சின்னம்மா அவர்களை மட்டும் ஈபிஎஸ் சேர்த்துக் கொள்வார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதுவே ஒரு சமுதாயத்தை ஈர்க்கும் விசயம் ஆக அமையும் என்றே உணரத் தோன்றுகிறது. நன்றி மறந்த ஈபிஎஸ் என்று சொல்லும் நாக்கள் நன்றி மறவாத ஈபிஎஸ் என்று சொல்லும் காலம் வருகிறதோ? இது அரசியல் ரீதியான சாணக்கியத்தனமாகவும் இருக்குமோ?
எது எப்படியோ கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் கடமையும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே எனது அவா..! பங்காளிகளிடம் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, பகையாளிகளிடம் சண்டை போடத் தொடங்குங்கள்’’என்று அறிவுறுத்தி இருக்கிறார்.