பூதாகரமான செங்கோட்டையன்- ஈபிஎஸ் பிரச்சனை! 82 நிர்வாகிகளுடன் உரையாற்றிய பழனிசாமி... செங்கோட்டையனை மட்டும் புறக்கணித்ததால் பரபரப்பு

 
sengo

மாவட்டம் வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்தாய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தவில்லை. கலந்தாய்வு கூட்டத்திற்காக காலை முதல் காத்திருந்த செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் கலந்தாய்வுக் கூட்டத்தை இன்று நடத்தினார். சென்னையில் இருந்தபடி ஒவ்வொரு மாவட்டமாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார். இதற்காக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் பவளமலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் காணொலி காட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பிப்ரவரி 9.ம் தேதி அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்திய பாராட்டு விழாவை கே.ஏ செங்கோட்டையன் புறக்கணித்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி அந்த நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நிகழ்ச்சியை புறக்கணித்தது வெளிப்படையாக தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை கே.ஏ.செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். அதிமுக பொதுக்கூட்ட மேடைகளிலும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அவரது ஆட்சியை குறித்தும் பேசுவதையும் தவிர்த்து வந்தார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமியால் நேரடியாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜாவின் ஆதரவாளரான அதிமுக நிர்வாகி பிரவீன்  தங்களுக்கு உரிய அழைப்பும் மரியாதையும் தருவதில்லை என செங்கோட்டையன் முன்னிலையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பியதால் அடிதடி ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் கே.ஏ. செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். கூட்டத்தில் பங்கேற்பவர்களின் செல்போன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும் பெயர் சரிபார்க்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன் காணொலி மூலம் பங்கேற்றதால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கோபியில், கடந்த அதிமுக  கூட்டத்தில் கேள்வி எழுப்பி பிரச்சனையை ஏற்படுத்திய நிர்வாகிகளுக்கு இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி காணொலி கூட்டத்தில் பங்கேற்க ஈரோடு புறநகர் அதிமுக சார்பில் மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் 87 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.   அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் வாயிலில் ஒட்டப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறப்பட்டு அவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  மற்ற நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கடந்த வாரம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் தங்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என செங்கோட்டையன் முன்னிலையில் கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டது. இத்தகைய பிரச்சனையை தவிர்க்க செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் பிரச்சனையை ஏற்படுத்திய பிரவீன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. ஆகையால் அவர்கள் பங்கேற்கவில்லை.. கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு வந்த செங்கோட்டையன் ஏற்பாடுகளை கவனித்தார். பெரும் எதிர்பார்ப்புடன் நிர்வாகிகள் காணொலி கூட்டத்தில் காலை முதல் பங்கேற்று இருந்தனர். நண்பகலில் இடைவேளைக்குப் பிறகு ஈரோடு புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி கலந்து ஆலோசனை நடத்துவார் என நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இறுதி வரை செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன்  எடப்பாடி பழனிச்சாமி கலந்த ஆலோசனை நடத்தவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் நிர்வாகிகள் கூட்ட அரங்கில் இருந்து புறப்பட்டு சென்றனர்.