பாஜகவில் இணையும் மாஜி முதல்வர்

 
கி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கிரன்குமார் ரெட்டி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் பரவுகிறது.

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிரண் குமார் ரெட்டி(62).   இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் நான்கு முறை எம்எல்ஏவாக  இருந்துள்ளார் . 2009 முதல் 2010 வரை ஆந்திரா  சட்டமன்ற சபாநாயகராகவும் பணிபுரிந்துள்ளார்.  பின்னர் ஆந்திராவின் முதல்வராக 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

கி

 கடந்த சில தினங்களாக கிரண் குமார் ரெட்டி டெல்லியில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார்.   அவரை கட்சியில் சேர்க்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது என்றும் தகவல் பரவுகிறது. 

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் விரைவில் அவர் பாஜகவில் இணைய இருக்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார் .  கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தால் ஆந்திர மாநில பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 

 ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் பதவியையும் , காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தவர் கிரண் குமார் ரெட்டி. பின்னர் இவர் ‘ஜெய் சமைக்யந்திர’என்ற  தனிக்கட்சியையும் தொடங்கினார்.  அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.  இந்த நிலையில் தற்போது காங்கிரஸிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.