இத்தாலிக்கு பறந்த ராகுல் காந்தி... தேவையில்லாத வதந்தியை பரப்பாதீங்க.. பா.ஜ.க.விடம் காங்கிரஸ் வேண்டுகோள்

 
ராகுல் காந்தி

வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார் ஆகையால், பா.ஜ.க. மற்றும் அதன் ஊடக நண்பர்கள் இது தொடர்பாக தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனால் அந்த மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி 3ம் தேதி ராகுல் காந்தியை வைத்து தொடங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால்  தள்ளிப்போகும்  என்று தெரிகிறது. ஏனென்றால் ராகுல் காந்தி திடீரென தனிப்பட்ட பயணமாக இத்தாலிக்கு கிளம்பி சென்றுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ராகுல் காந்தி குறுகிய கால பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க.வும், அதன் ஊடக நண்பர்களும் தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். ராகுல் காந்தி முக்கியமான நேரங்களில் இந்தியாவில் இருப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. அதனை உறுதி செய்வது போல், தற்போதைய ராகுலின் இத்தாலி பயணம் அமைந்துள்ளது.

பா.ஜ.க.

கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, ராகுல் காந்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ராகுல் காந்தி இந்தியா  திரும்பியது குறிப்பிடத்தக்கது.