அரசாங்க கஜானா - திறந்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்த 14ஆம் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. ஆனால் அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்த எந்த அறிவிப்பையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கவில்லை. அதற்கு நிதி நிலைமையை காரணம் சொல்லி, எல்லாம் சரி செய்யப்படும் என்று ஆறுதல் கூறினார். தமிழ்நாட்டின் கஜானாவை அவர் திறந்து காட்டியிருக்கிறார். அதாவது தமிழ்நாட்டு கஜானாவின் தற்போதைய நிலைமை குறித்து மனம் திறந்து அரசு ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.
நீங்கள் அரசு ஊழியர்கள். நான் மக்கள் ஊழியன். அதுதான் நம் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம். இதை உங்களுக்கு உணர்த்துவதற்காக தான் நான் இந்த மாநாட்டிற்கு தேடி வந்திருக்கிறேன் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்று பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் எழுப்பிய கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நான் உணருகின்றேன்; அதை ஏற்றுக் கொள்கின்றேன். அதேநேரம் அரசாங்கம் தற்போது உள்ள நிலைமையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
முதல்வர் இப்படிச்சொன்னதுமே அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசு ஊழியர்கள் முன்பே முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். முதல்வர் தனது பேச்சில், 5 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரழித்து சூறையாடியது மான ஒரு ஆட்சி நடந்தது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருக்கக்கூடிய எதார்த்தத்தை தான் சொல்கிறேன். அதை நான் உங்களிடம் தான் கூற முடியும். வேறு யாரிடமும் கூற முடியாது என்று அழுத்தமாக குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் நடந்த தவறுகளிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்று சொன்னவர், நிதி நிலைமையை சரி செய்ய வேண்டும். 5 லட்சம் கோடி கடன்களை அடைக்க வேண்டும் . அதற்காகத்தான் புதிய தொழில்களை புதிய தொழில் நிறுவனங்களை அழைத்து வருவதன் மூலமாக வளர்ச்சியை உருவாக்க முனைந்து வருகிறோம் . புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அது குறித்துப் பேசிய முதல்வர், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்று சொன்னார்.. பெட்டி இருக்கிறது பூட்டு இருக்கிறது சாவி இருக்கிறது. ஆனால் பெட்டி காலியாக இருக்கிறது என்று சொன்னார் என்று தமிழக அரசின் கஜானா நிலவரம் குறித்து எடுத்துச் சொன்னவர், அரசாங்கத்தின் கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும்.
அரசாங்க கஜானாவுக்கு வரவேண்டியது மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதனை மொத்தமாக ஒன்றிய அரசு பறித்து விட்டது. அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும், நிதி நிலைமையை பொருத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை முறையை போல கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரணநிதி வரைக்கும் நமக்கு தர வேண்டிய நிதியை முழுமையாக தரப்படுவது இல்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றவர், அரசு ஊழியர் சங்கமாக மட்டுமில்லை நீங்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள் நிரம்பிய சங்கமாகவும் இருக்கின்ற காரணத்தால் நான் இதற்கு மேல் தெளிவுபடுத்த அவசியமே கிடையாது என்றார்.