"நிறைய கட்சிகளிலிருந்து ஆபர்" - கிரிக்கெட், சினிமாவுக்கு அடுத்து அரசியலில் ஹர்பஜன் என்ட்ரி?
பஞ்சாப் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே அங்கு காங்கிரஸுக்குள் வழக்கமாக ஏற்படக் கூடிய கோஷ்டி தகராறு ஏற்பட்டது. முதலமைச்சராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. காங்கிரஸ் தலைமை அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க படாத பாடுபட்டது. ஆனால் கைகூடவில்லை. இறுதியில் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்தும் விலகிவிட்டார்.
தற்போது முதலமைச்சராக்கப்பட்டிருக்கும் சரண்ஜித் சிங்குக்கும் சித்துவுக்கும் நல்ல புரிதல் இருப்பதால் அங்கு சுமுகமான நிலை எட்டப்பட்டுள்ளது. இச்சூழலில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் ஒருபுறம் போராடுகிறது. பாஜகவோ உட்கட்சி பூசலை சாதகமாக கருதி களத்தில் இறங்கி பம்பரமாக சுழல்கிறது. அதில் முக்கியமானது விளையாட்டு வீரர்கள், சினிமா ஸ்டார்கள் என மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையை இரு தரப்பினரும் பார்க்கின்றனர்.
Picture loaded with possibilities …. With Bhajji the shining star pic.twitter.com/5TWhPzFpNl
— Navjot Singh Sidhu (@sherryontopp) December 15, 2021
அந்த வகையில் நவ்ஜோத் சித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படமும், அதனையொட்டி அவர் சொன்ன கருத்தும் பஞ்சாப் அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியது. அதனை ட்வீட் செய்த சித்து, "சாத்தியக்கூறுகள் அதிகம்...” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வட்டமடித்தன. இச்சம்பவத்திற்கு முன் அவர் பாஜகவில் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை ஹர்பஜன் திட்டவட்டமாக மறுத்தார். இருப்பினும் சித்து சந்திப்பு குறித்து அவர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இதனிடையே அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இச்சூழலில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், "எனக்கு நிறைய கட்சிகளிடமிருந்து ஆபர்கள் வருகின்றன. ஆனால் இதுவரை எந்த கட்சியில் இணையவும் முடிவெடுக்கவில்லை. இது சின்ன விஷயம் அல்ல. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அரை மனதுடன் அரசியலுக்குள் வர விரும்பவில்லை. ஆகவே ஆழ யோசித்து, அதற்கேற்ப தயாராகி நுழைவேன். நான் முடிவெடுத்தால் அறிவிப்பேன். சக கிரிக்கெட் வீரர் என்ற முறையிலேயே சித்துவை சந்தித்தேன்" எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.