உத்தரகாண்டில் மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பு இல்லை.. ஆம் ஆத்மி குறித்து ஹரிஷ் ராவத்

 
ஹரிஷ் ராவத்

உத்தரகாண்டில் மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கான வாய்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சி சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உத்தரகாண்டில் மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தரகாண்டின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது தொடர்பாக கேட்ட கேள்விக்கு ஹரிஷ் ராவத் கூறியதாவது:  மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பே இல்லை. முன்பு இருந்த கட்சிகள் படிப்படியாக மறைந்து விட்டன. போராட்ட வரலாற்றை கொண்ட உத்தரகாண்ட கிராந்தி தளமும் கூட மக்களால் வரலாற்றின் பைக்குள் தள்ளப்பட்டுள்ளது. 

ஆம் ஆத்மி

எனவே புதிய கட்சி பற்றி எந்த கேள்வியும் இல்லை. இது டெல்லி அல்ல. டெல்லியில் மக்கள் வருவார்கள், எதையாவது பேசுவார்கள், எல்லா இடங்களிலும் பேசுவார்கள். புவியியல் சூழ்நிலை மற்றும் எல்லா வகையான சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டு ஒரு கொள்கையை உருவாக்க நேரம் தேவை. அந்த நேரத்தை அவர்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.