டிசம்பருக்குள் பாஜகவுக்குள் வந்துடணும் - வாசனுக்கு பாஜக கொடுக்கும் அழுத்தம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கப் போகிறார் என்று தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு அச்சாரமாகத் தான் ஜி. கே. வாசனை ராஜ்யசபாவுக்கு பாஜக அனுப்பி வைத்தது என்கிறார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஜிகே வாசனை பாஜகவுக்குள் கொண்டு வந்து விட துடிக்கிறது பாஜக. இந்த நிலையில் டெல்லியில் பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசி இருக்கிறார் வாசன். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் அதிமுக -பாஜக மோதல் குறித்து வாசன் பேசியிருக்கிறார் . அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து நின்று ஜெயிக்க முடியாது என்பதையும் அவர் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, வாசனை பாஜகவுக்குள் வந்து விடும்படி மூன்று பேருமே அறிவுறுத்தி இருக்கிறார்களாம். கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்க வேண்டியது எங்கள் பொறுப்பு என்று மோ,டி அமித்ஷா, நட்டா மூன்று பேரும் உறுதியாக சொல்லி இருக்கிறார்களாம்.
தான் மட்டும் வரும் முடிவு அல்ல. இது கட்சியினர் மொத்தமும் பாஜகவுக்கு வர வேண்டிய விஷயம். அதனால் நானாக எதுவும் முடிவு எடுக்க முடியாது. கட்சி நிர்வாகிகளை கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கென்ன தாராளமாக பேசுங்க.. ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் நீங்கள் பாஜக பாஜகவிற்குள் வந்துவிட வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்களாம்.