ஒரே நாளிலா? ஓபிஎஸ்-இபிஎஸ் திட்டத்தால் அதிர்ந்த நீதிபதி
ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டமும், ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஒரே நாளில் இரு தரப்பினரும் அனுமதி கேட்டதால் அதிர்ந்து போன நீதிபதி , இது குறித்து சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து சட்டத்திற்கு உட்பட்ட முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி. ஆர். செந்தில்நாதன் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘’மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற நடத்த இருக்கிறோம். இதற்காக கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி இருக்கிறார்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் கே. ஆர். அசோகனும் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில், ’’தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளர், கட்சி உறுப்பினர்கள் , மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி அதிமுகவில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு வரும் மார்ச் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் . இதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி இருக்கிறார்.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் இது குறித்து கேட்க, வழக்கு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளார் . இதை அடுத்து மனுதாரர்கள்இரண்டு மனுக்களையும் சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து சட்டத்திற்கு உட்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.