என் மூச்சு உள்ளபோதே கோட்டையில்... ராமதாஸ் உருக்கம்

 
p

என் மூச்சு உள்ள போதை கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகளிடம் உருக்கமாக பேசியிருக்கிறார். பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில்தான் அவர் இவ்வாறு உருக்கமுடன் பேசியிருக்கிறார்.

 ஆன்லைன் மூலமாக நடந்துள்ளது பாமகவின் சிறப்பு பொதுக்குழுகூட்டம்.   கட்சியின் தலைவர் ஜிகே மணி கூட்டத்திற்கு தலைமை தாங்க,  ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.   தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாமக மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  

pk

 இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் பாமகவின் செயல்பாடுகள் கூட்டணி குறித்த நிலைப்பாடு ஆகியவற்றை ஆலோசிக்கப்பட்டு இருக்கின்றன.   எதிர்வரும் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

 அப்போது பேசியிருக்கும் ராமதாஸ்.    ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு நமக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.  நாம் பலமான கட்சி நம்முடைய பலம் எல்லாம் எங்கே போய்விட்டது.  எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே என்று கவலை தெரிவித்திருக்கிறார்.   பின்னர்,   ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம்.   கட்சியில் போட்டி பொறாமை இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.  

 அவர் மேலும்,   திமுக -அதிமுகவுக்கு நாம் பல நேரங்களில் உதவி இருக்கிறோம்.  ஒரு கட்சி நம்மை களங்கப் படுத்தியது.  இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கௌரவப்படுத்தியது.    இனி நமது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும்.   வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது என்று அழுத்தமாகச் சொன்ன ராமதாஸ்,   வீடு வீடாகச் சென்று பாமகவின் பெருமைகளையும் செயல்திட்டங்களையும் எடுத்துச்சொல்லுங்கள்.  மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லியிருப்பவர்,    என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.