சில்வர் லைன் ரயில் திட்டத்தில் கமிஷன் பெறுவதுதான் குறிக்கோள்.. கேரள முதல்வர் பினராயி விஜயனை தாக்கிய காங்கிரஸ்

 
தந்தை பெரியார் பிறந்தநாள்; தமிழில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவு!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சில்வர் லைன் ரயில் திட்டத்தில் கமிஷன் பெறுவதுதான் குறிக்கோள் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலத்தில் தெற்கே திருவனந்தபுரத்தையும், வடக்கே காசர்கோடு வரை இணைக்கும்  மித வேக ரயில் பாதை அமைக்கும் திட்டமான கே-ரயில் சில்வர் லைன் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான இடதுசாரி அரசு முன்வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது, சில்வர் லைன் திட்டத்தில் கமிஷன் பெறுவதுதான் முதல்வர் பினராயி விஜயனின் குறிக்கோள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேரள காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன் இது தொடர்பாக கூறியதாவது: சில்வர் லைன் (ரயில் திட்டம்) பிரச்சினை கேரளாவின் வாழ்வா சாவா பிரச்சினையாகவே பார்க்கிறோம். இந்த திட்டத்தை ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்த முடியாது. 

கே.சுதாகரன்

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கேரள அரசு கூறுவது ஆணவமாகும். சில்வர்லைனின் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) இன்னும் பார்க்கப்படவில்லை. ஆரம்பம் முதலே அரசு மக்களே ஏமாற்றி வருகிறது. இந்த திட்டத்தால் கேரள மக்களுக்கு பேரிடரை தவிர எந்த பயனும் இல்லை. இந்த திட்டத்துக்கு எதிராக  இறுதிவரை சட்டரீதியாக போராடுவோம். மக்களை நம்ப வைக்க முதல்வர் (பினராயி விஜயன்) கையில் என்ன ஆவணம் உள்ளது?. இந்த அரசுக்கு இலக்கு உள்ளது. முதல்வரின் செயல்திட்டம் என்ன? முதல்வரிடம் வெளிப்படையற்ற மற்றும் நேர்மையற்ற செயல்திட்டம் உள்ளது. 

கே ரயில் திட்டம்

எந்த முதல்வருக்கும் இல்லாத ப்ளஸ் பாயிண்ட் இந்த முதல்வருக்கு உண்டு. கமிஷன் வாங்குவதில் முதல்வர் டாக்டர் பட்டம் பெற்றவர். இந்த திட்டத்தில் (சில்வர்லைன் ரயில் திட்டம்) கமிஷன் பெறுவதே அவரது குறிக்கோள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இல்லை என்றால், அவர் எங்களை சமாதானப்படுத்த வேண்டும். பினராயி விஜயன் சர்வாதிகாரியா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசி ஒரு சீரழிந்த கட்சி. அதன் கொள்கைகள் அவ்வப்போது மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.