கர்நாடகாவில் பயங்கரவாதத்தை தோற்றுவித்ததே காங்கிரஸ்தான்.. கர்நாடக பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு
கர்நாடகாவில் பயங்கரவாதத்தை தோற்றுவித்ததே காங்கிரஸ்தான் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கட்டீல் குற்றம் சாட்டினார்.
கர்நாடக மாநிலம் கார்வாரில் விஜய் சமபர்க யாத்திரை அம்மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கட்டீல் தொடங்கி வைத்தார். அப்போது நளின் குமார் கட்டீல் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் ஒரு தீவிரவாத குழு. காங்கிரஸ்தான் பயங்கரவாதத்தை தோற்றுவித்தது. காங்கிரஸின் மூத்த தலைவர்களான டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா போன்றோர் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.
சித்தராமையா முதல்வராக இருந்த காலத்தில் பல இந்துக்கள் கொல்லப்பட்டனர், டி.டி.எஸ்.பி. கணபதி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி ஆகியோரின் மரணத்துக்கு காங்கிரஸே காரணம். தட்சின கன்னடாவில் பல இளைஞர்கள் உயிரிழந்ததற்கு சித்தராமையாவும் காரணம். சித்தராமையாவின் நிர்வாகமே சாமானிய மக்களின் கண்ணீருக்குக் காரணம். பின்னர் எச்.டி.குமாரசாமி முதல்வராக கண்ணீர் சிந்தினார்.
எடியூரப்பாவின் தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் சாமானிய மக்களின் கண்ணீரை துடைத்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநில அரசையும் எடியூரப்பா வழிநடத்தினார். துருவமுனைப்பு மூலம் மக்களை காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. திப்பு ஜெயந்தியை அனுசரித்த காங்கிரஸ் அரசு மாநிலத்தில் வன்முறைக்கு வழிவகுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.