கர்நாடகாவில் புதிய முதல்வர் என்ற கேள்விக்கே இடமில்லை... ஊக செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பசவராஜ் பொம்மை
கர்நாடகாவில் புதிய முதல்வர் என்ற கேள்விக்கே இடமில்லை என்று தான் மாற்றப்படலாம் என்ற ஊக செய்திகளுக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை முழங்கால் தொடர்பான பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற வாய்ப்புள்ளதாகவும் ஊக செய்திகள் வெளியான. ஆனால் இது தொடர்பாக கர்நாடக முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த சூழ்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. இதனை முதல்வர் பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார். ஹூப்ளியில் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: டாவோஸில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை.
கர்நாடகாவில் புதிய முதல்வர் என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் நெருக்கடி காரணமாக பதவி விலகினார். இதனையடுத்து அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜூலை 28ம் தேதியன்று அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.