சமாஜ்வாடி கட்சிக்கு மம்தா ஆதரவு.. பிப்ரவரி 8ம் தேதி அகிலேஷ் யாதவுடன், மம்தா பானர்ஜி பத்திரிகையாளர் சந்திப்பு

 
மம்தா பானர்ஜி

உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் துணை தலைவர் கிரண்மோய் நந்தா தெரிவித்தார்.

சமாஜ்வாடி கட்சியின் துணைதலைவர் கிரண்மோய் நந்தா நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அதன் பிறகு கிரண்மோய் நந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மம்தா பானர்ஜி பிப்ரவரி 8ம் தேதியன்று லக்னோ செல்கிறார். அன்று சமாஜ்வாடி கட்சி அலுவலகத்துக்கு சென்று அகிலேஷ் யாதவை அவர் சந்திப்பார். பின் அங்கு இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்துவார்கள்.  

கிரண்மோய் நந்தா

அதனை தொடர்ந்து வாரணாசியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் மம்தாவும், அகிலேஷ் யாதவும் கலந்து  கொண்டு பேசுவார்கள். கூட்டத்துக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உத்தர பிரதேசத்தில் மம்தா தேர்தலில் போட்டியிட மாட்டார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் சமாஜ்வாடிக்கு கட்சிக்கு வெளியில் இருந்து அளிப்பதாக மம்தா உறுதிப்படுத்தியுள்ளார். 

அகிலேஷ் யாதவ்

அரசாங்கம் (பா.ஜ.க.) எதை செய்ய விரும்புகிறதோ, அதை செய்யட்டும். மக்கள் முடிவு செய்து விட்டனர். எங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பயன்படுத்தியுள்ளனர். வரும் தேர்தலில் பா.ஜ.க. வேரோடு சாய்ந்து விடும். சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைக்கும். அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.