அதிமுகவை விட்டு வெளியே வந்தால்தான் பாஜகவின் பலம் தெரியும்- கே.எஸ்.அழகிரி
அதிமுகவை விட்டு வெளியே வந்தால் தான் பாஜகவினரின் பலம் என்னவென்று தெரியும், இவர்கள் எதிர்க்கட்சி என்று கூறுவதெல்லாம் அட்டைக் கத்தியை வைத்து சண்டை போடுவது போல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் 73- ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல போராட்டங்களுக்கு பிறகு இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, ஆர்எஸ்எஸ்-பாஜக போன்றவர்கள் இந்த சுதந்திரத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். சுதந்திரத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் சுதந்திரத்திற்காக உழைத்தவர்கள் பற்றி கேலி செய்வது நல்லதல்ல. பாஜகவினர் மகாத்மா காந்தியை மறக்கவும், நேருவை மறைக்கவும் நினைகிறார்கள். பாரதிய ஜனதாவின் சித்தாந்தம் உண்மையான வரலாற்றை மூடி மறைப்பது தான்.
உலகத்திற்கே முதன்மையான குடிமகன் மகாத்மா காந்தி அவருடைய புகழை மறைக்க பாரதிய ஜனதா நினைக்கிறது. குஜராத்தில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்படாமல் அவரின் சீடரான வல்லபாய் படேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று பாஜகவினர் மத மாற்றம் தடை சட்டத்தை கொண்டு வர நினைக்கிறார்கள். இந்திய நாட்டில் வாழும் அனைத்து மதத்தினரும் ஒன்றுதான் மற்ற மதங்களை தாழ்வாக நினைப்பது கூடாது, மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் எங்குமே மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. அதிமுக தயவில் பிஜேபி இருக்கிறது. அதிமுகவை விட்டு வெளியே வந்து எதிர்கட்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் யார் எதிர்கட்சி என்று தெரியும்” எனக் கூறினார்.