சிவ சேனா யாருடனும் கூட்டணி அமைக்க விரும்பினாலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. காங்கிரஸ்
சிவ சேனா யாருடனும் (பா.ஜ.க.) கூட்டணி அமைக்க விரும்பினாலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என மகாராஷ்டிரா காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிவ சேனா பிளவு ஏற்படும் என கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் அதிகமாக உள்ளதால், அவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனாவை கைப்பற்றும் அபாயம் உள்ளதோடு, பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியையும் அமைத்து விட வாய்ப்புள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய சிவ சேனா தயாராக உள்ளது அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார். சிவ சேனாவின் இந்த அறிவிப்பையடுத்து, சிவ சேனா யாருடனும் கூட்டணி அமைக்க விரும்பினாலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க நாங்கள் அவர்களுடன் (சிவ சேனா) இருக்கிறோம். அமலாக்கத்துறை விளையாட்டு காரணமாக இந்த விளையாட்டு நடக்கிறது. நாங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியுடன் இருக்கிறோம், இருப்போம். அவர்கள் (சிவ சேனா) யாருடனும் கூட்டணி அமைக்க விரும்பினால், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எங்கள் கட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.