அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய மம்தா.. கட்சி பதவிகளை பறித்த அபிஷேக்.. பார்த்தா சட்டர்ஜிக்கு அடுத்தடுத்து அடி..
மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கினார். மேலும், கட்சி பதவிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முதலில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. அப்போது ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. அண்மையில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில், பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க, வெள்ளி நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குறிப்பாக, பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து சுமார் ரூ.50 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல். இந்நிலையில், என் வீட்டில் உள்ள அனைத்து பணமும் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமானது என அர்பிதா முகர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல். பார்த்தா சட்டர்ஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாகி வருவதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.
பார்த்தா சட்டர்ஜி வசம் தொழில், வர்த்தகம் மற்றும் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஆகிய 3 துறைகள் இருந்தன. தற்போது இந்த துறைகள் முதல்வர் மம்தா பானர்ஜி வசம் உள்ளது. பார்த்தா சட்டர்ஜிக்கு அடுத்த அடியாக அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவரான அபிஷேக் பானர்ஜி கூறுகையில், கட்சியின் பொதுச் செயலாளர், தேசிய துணை தலைவர் மற்றும் இதர 3 பதவிகளிலிருந்தும் பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மீண்டும் கட்சிக்கு வரலாம் என தெரிவித்தார்.