ஆட்சியில் இல்லைன்னா நீங்களும் எங்களை மாதிரிதான் இருப்பீங்க.. அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த மாயாவதி
ஆட்சியில் இல்லைன்னா நீங்களும் எங்களை மாதிரிதான் இருப்பீங்க என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பொதுக்கூட்டங்களில் அமித் ஷா பேசுகையில், சகோதரியின் (மாயாவதி) குளிர் இன்னும் நீங்கவில்லை. ஒ சகோதரி, தேர்தல் வந்து விட்டது, கொஞ்சம் வெளியே வாருங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியை கிண்டல் செய்து இருந்தார். இதற்கு, ஆட்சியில் இல்லைன்னா நீங்களும் எங்களை மாதிரி இருப்பீங்க என்று மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸூம், பா.ஜ.க.வும் ஆட்சியில் இருக்கும்போது, அது மத்தியில் அல்லது மாநிலமாக இருந்தாலும் சரி, அவர்கள் தேர்தலுக்கு ஒரிரு மாதங்களுக்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஆனால் இந்த கட்சிகள் ஆட்சியில் இல்லாதபோது, அவர்களும் எங்களை போலவே இருப்பார்கள். தேர்தலுக்கு முன் அவர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. தொடக்க விழாக்களில் கலந்து கொள்வதில்லை, அடிக்கல் நாட்டுவதில்லை.
போட்டி கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் கூட்டத்தினரில் பாதி பேர் அரசு ஊழியர்கள், மற்றவர்கள் டிக்கெட் கோருபவர்கள். உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இதை பார்க்கிறோம். அவர்களை போல் செய்தால், தேர்தல் நேரத்தில் பணப்பற்றாக்குறை நஷ்டம் ஏற்படலாம். தேர்தலை பொறுத்தவரையில் எங்கள் கட்சி வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. போட்டிக் கட்சிகள் எங்களை கேலி செய்தாலும், பத்திரிகைகள் இதை பற்றி எழுதினாலும் இதை மாற்ற விரும்பவில்லை. எங்களை பற்றி மற்ற கட்சிகள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.