வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது! பொன்.ராதாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படவில்லை அதே நேரத்தில் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் செல்கிறது என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கேரளாவிற்கு கன்னியாகுமரி வழியாக நெல்லையிலிருந்து கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுகிறது. இதற்கான அதிகாரத்தை வைத்திருப்பது மத்திய அரசு. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு இதை தெரியாமல் இருப்பது வியப்பாக உள்ளது. இல்லை இதை தெரிந்து வைத்துக் கொண்டு அவர் நாடகமாடுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு மத்திய அரசுதான் அனுமதிக்கிறது.
இதற்கான சட்டத்தை வைத்திருப்பது மத்திய அரசு அந்த சட்டத்தை அவர்கள் விலக்கி கொண்டால் மறு நிமிடமே கேரளாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவளங்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த தடையை விதிக்காத வரையில் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவதை தடுக்க முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக எந்த குவாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல நிச்சயமாக அனுமதி அளிக்கப்படவில்லை. நான்கு வழிச்சாலையை பொருத்தவரையில் 50 லட்சம் மெட்ரிக் டன் மண் தேவைப்படுகிறது. அதற்குரிய மண் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகள் ரிசர்வு வனப்பகுதி ஆகவும் சூழலியல் மண்டலங்களாகவும் பல கிராமங்கள் மலையடி குழும பகுதிக்குள்ளும் உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அந்த அளவிற்கு மண் எடுப்பதற்கு சாத்தியமில்லை.
எனவேதான் இந்த திட்டத்திற்கு மண் இருக்கும் பகுதியில் இருந்து மண் கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த பணிகள் தொடங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழலியல் தன்மைகள், புவியியல் அமைப்பு, சூழலியல் மண்டலம் போன்றவைகள் குறித்து 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அவர் வாய்க்கு வந்தபடி ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். பொறுப்பான பதவியில் இருந்தவர் இப்படி பேசுவது அழகல்ல. அவருக்கு நான் பதில் சொல்வது அழகல்ல” எனக் கூறினார்.