"காப்பானே கள்வனாக; திராவிட அரசுகள் வாக்குமூலம்" - மக்கள் நீதி மய்யம் அட்டாக்!
ஒவ்வொரு மழை வெள்ளம் ஏற்படும்போதிலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து தொடர்பான விவாதம் எழும். அந்த வகையில் சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதம் போல இந்தாண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையாலும் ஏற்பட்டது. இதனால் கடந்த வெள்ளத்தில் அரசு கற்ற பாடம் என்ன, அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றமும், அதன் மதுரைக்கிளையும் இவ்விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றன.
இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து தலைமைச் செயலர் இறையன்புவே நேரடியாக ஆஜராக நேரிடும் என எச்சரித்திருந்து. நீதிமன்றம் சொல்லாமலே கடந்த வாரம் இறையன்பு நீதிமன்றத்தில் ஆஜராகினார். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது எனவும் அவர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
மேலும் அவர் மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். விரிவான அறிக்கையை அனுப்பிவைக்கும்படியும் வலியுறுத்தினார். இச்சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? pic.twitter.com/VMlXpEz7It
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 16, 2021
அப்பதிவுடன் நீர்நிலையில் அரசு கட்டடம் கட்டப்பட்டிருக்கும் படத்தை இணைத்துள்ளது. படத்தில் இருப்பது செம்மஞ்சேரி காவல் நிலையம் என்பது கவனிக்கதக்கது. அதில், "தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.