"உத்தரவிட்டது யார்? தமிழகமே கொந்தளிக்கும் என தெரியாதா?" - மத்திய அரசுக்கு முத்தரசன் வார்னிங்!

 
மோடி

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். ஆனால் இம்முறை அதனை நிராகரித்துள்ள மத்திய அரசு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் விசித்திரமாக இருக்கிறது. அதாவது அலங்கார ஊர்தியில் இருக்கும் வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார் ஆகியோர் பிரபலமில்லாத தலைவர்கள் எனவும், அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்பதாலும் நிராகரிப்பதாக சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

மோடி

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், "குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் பங்கேற்க அனுமதியில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் ஆகிய தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஊர்திகள் அனுமதிக்கப்படக் கூடாது என உத்தரவு போட்டது யார்? என்ன காரணம்? 

VOC – The Tamil Patriot Who 'Steered The Ship'

தமிழ்நாடு தயாரித்துள்ள விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி மத்திய அரசு என்ன நினைக்கிறது? ராணி வேலுநாச்சியார் காலனி ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்துப் போராடி சாதனை படைத்தவர். வ.உ.சிதம்பரனார் காலனி ஆதிக்கத்தை எல்லா முனைகளிலும் எதிர்த்துப் போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 30 வயதில் 40 ஆண்டுகால தீவாந்திர சிறை தண்டனை பெற்றவர். விடுதலைப் போராட்டத்தை தனது கனல் மூட்டும் கவிதைகளாலும், கருத்தாயுதம் தரும் கட்டுரைகளாலும் எழுச்சியூட்டிய புரட்சியாளர் மகாகவி பாரதியார் காலத்தை வென்று வாழ்பவர். 

Tamil Nadu Tableau at Republic Day Parade 2020 | Republic Day Parade 2020 -  YouTube

இவர்களது தியாக வாழ்வைச் சித்தரிக்கும் ஊர்திகளுக்கு குடியரசு தின அணிவகுப்பில் இடமில்லை எனில் தமிழகம் கொந்தளிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உடனடியாகத் தமிழக அரசின் ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசின் வன்மப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கட்சி அமைப்புகளைக் கேட்டுக் கொள்வதுடன் இப்போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.