EIA எதிர்ப்பு : குழந்தைகளும் பங்குபெறும் போராட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சி
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவு அறிக்கை மீது கடும் விமர்சனங்களை வைக்கின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக, பசுமை வளத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனும் அம்சத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த அம்சத்தால் விவசாய நிலங்களை அழிக்கும் 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் எளிதாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும் எனக் கருதுகின்றனர்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவை எதிர்த்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி கருத்துத் தெரிவித்திருந்தனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு வெகுவாக இக்கருத்துகள் சென்று சேர்ந்தன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவை எதிர்த்தும் இதை திரும்பப் பெறக்கோரியும் தமிழ்நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகிறது.
இது குறித்து சீமான் கூறுகையில், ‘இந்தத் திட்டம் நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறை நல்வாழ்விற்கும் கேடுவிளைவிக்க கூடியது; பேராபத்தானது. ஏற்கனவே, இயற்கைக்கெதிராக மனிதகுலம் மேற்கொண்ட அத்துமீறல்களாலேயே, பருவநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் போன்ற இயற்கைச்சீர்கேடுகளும் , கொரோனா போன்ற இதுவரை வந்திராத புதிய நோய்த்தொற்று பரவல்களும், நோய்த்தாக்கங்களும் ஏற்பட்டு இந்த பூமியே மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமற்றதாக மாறிவரும் நிலையில், மேலும் சூழலை மாசுபடுத்தி, பாழ்படுத்தக் கூடியவகையில் இத்தகைய முறையற்ற அனுமதிகளை சட்டப்பூர்வமாக வழங்குவதென்பது மேலும் இயற்கையை சீரழிக்கவே வழிவகுக்கும்.
ஆகவே, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நாட்டின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு முக்கியமான அறிவிக்கையை உருவாக்கும் போது, தலைசிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று கேட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி நடத்தும் இந்தப் போராட்டத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குழந்தைகளும் பங்கேற்றுவருகின்றனர். அந்தப் படம் சமூக ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.