ஓபிஎஸ் அரசியல் ஜோக்கர்; பணம், பதவி இல்லாமல் அவரால் இருக்கமுடியாது- நத்தம் விஸ்வநாதன்
ஒ.பன்னீர்செல்வம் ஒரு அரசியல் ஜோக்கர், வடிவேலு காமெடியில் சொல்வது போல நானும் ரவுடி நானும் ரவுடி என சொல்லி திரிகிறார் என நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
பழனியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பன்னீர்செல்வம் ஒரு அரசியல் ஜோக்கர். அரசியல் முதிர்ச்சியில்லாதவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து என்ன செய்வது என்றே தெரியாமல் சுற்றித்திரிகிறார். காமெடி நடிகர் வடிவேல் சினிமாவில் கூறுவது போன்று நானும் ரவுடிதான், நானும் ரவுடி தான் என்பது போல கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோதும் நான் தான் அண்ணா திமுக என்றும், நான்தான் பொதுச்செயலாளர் என்றும் சொல்லித் திரிகிறார். மேலும் மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் நகைபுக்குள்ளாகியுள்ளார்.
தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், அப்போது சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தார். அதன் அடிப்படையில் தான் உட்பட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம், ஆனால் தற்போது பதவி இல்லை என்றவுடன் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கச் சொல்கிறார் பன்னீர்செல்வம், மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக உள்ளார். அதேபோல ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பின்னர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணைக்கு சென்ற பன்னீர்செல்வம் சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்து வந்துள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆதரவளித்து பின்னே சென்று தான் உட்பட அனைவரும் வெட்கி தலை குனிந்தோம். பன்னீர்செல்வத்தால் பதவி பணம் இல்லாமல் இருக்கவே முடியாது, பணம் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர். மேலும் பன்னீர்செல்வம் அரசியலில் வீழ்ச்சி அடைந்ததற்கு வேறு யாரும் காரணம் இல்லை. அவரது நடவடிக்கைகள் தான் காரணம்” எனக் கூறினார்.