அமைச்சர் சிவசங்கருக்கு எதிர்ப்பு! கருப்பு கொடியுடன் திரண்ட மக்கள்
அமைச்சர் கே. என். நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினரே திருச்சியில் கருப்பு கொடி காட்டியதால் பெரும் மோதலாக மாறி முதல்வர் ,எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபமானது. இந்த நிலையில் இன்னொரு அமைச்சருக்கும் கருப்பு கொடி காட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு பெரம்பலூர் அருகே கருப்பு கொடி காட்டப்பட்டிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் வட்டார பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்கிற பெயரில் வெள்ளாற்றின் குறுக்கே கீழ குடிக்காடு கிராமப் பகுதியில் ஆழ்துறை கிணறுகள் அமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.
இந்த திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து லப்பை குடிகாடு பென்னகோணம், கீழக்குடி காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு தண்ணீர் எடுத்தால் தங்கள் பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்றும், அதனால் வறட்சி ஏற்படும் என்றும் சொல்லி திட்டத்தை மாற்று இடத்தில் துவங்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவசங்கர் வேப்பூர் குடிநீர் திட்டத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதினால் லப்பை குடிகாடு பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இன்று லப்பைகுடிகாடு பகுதியில் நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்றிருந்தார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி காட்டுவதற்காக தயாராக நின்றிருந்தனர். அவர்களில் சிலரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி சென்ற சிறிது நேரத்திற்கு பின்னர் திடீரென்று கடைவீதி பகுதியில் ஒன்று திரண்டு 30க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளார்.