கர்நாடகா தேர்தல்- காங்கிரஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவு: புகழேந்தி அதிரடி
ஓசூரில் நடந்த மே தின விழாவில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வா. புகழேந்தி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய புகழேந்தி, “வருமான வரித்துறை அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்பட்டு குற்றவாளிகளாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் எப்படி இந்த நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திக்கலாம்? அதற்கு அவர் எப்படி அனுமதி அளிக்கலாம்? இந்த சந்திப்பை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயற்சிப்பார்கள், இந்த துறை சார்ந்த நடவடிக்கைகள் அதிகாரிகளால் தொடருமா?
பொதுக்குழு கலைக்கப்பட்டதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்து உள்ளது மிகுந்த வரவேற்கத்தக்கது, இது சரியான ஒன்றாகும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆறு மாதத்திற்கு முன்னதாகவே நான் புகார் கொடுத்துள்ளேன். அதுவும் ஏற்கனவே விசாரணையில் உள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி. முனுசாமி ஐந்து வருட காலம் இருந்த ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்து வீணடித்தார். அவர் வீட்டில் வேலை வேலை செய்யும் டிரைவருக்கோ அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கும் சாமானிய தொண்டனுக்கோ அவர் கொடுத்திருக்கலாம்.
கர்நாடக தேர்தல் சமயத்தில் பிரச்சார மேடையில் தமிழ் தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது தவறு, கண்டனத்துக்குரியது என ஓபிஎஸ் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் தேசியக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எங்களிடம் கழக ஆதரவை கேட்டு வருகின்றனர். பாஜகவும், காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் ஆதரவை கேட்டு வருகிறார்கள், யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என முடிவு எடுப்பவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் அறிவித்தால் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு கூட ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.