காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா பா.ஜ.க.வில் இணைந்தனர்

 
பா.ஜ.க.வில் இணைந்த தினேஷ் மோங்கியா

பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஆகியோர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். 

பஞ்சாபில் தற்போது முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர்  நேற்று சத்தமில்லாமல் பா.ஜ.க.வில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

கஜேந்திர சிங் ஷொகாவத்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தினேஷ் மோங்கியா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர்  உள்பட மொத்தம்  8 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷொகாவத் இது தொடர்பாக கூறுகையில், பஞ்சாபில் பா.ஜ.க. தனது சிறகுகளை விரித்திருப்பதை இது காட்டுகிறது. இதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் பதற்றத்தில் உள்ளன. கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோர் எங்களுடன் கூட்டணியை அறிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ்

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தினேஷ் மோங்கியா செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வில் இணைந்து பஞ்சாப் மக்களுக்கு சேவை விரும்புகிறேன். இன்று நாட்டின் வளர்ச்சிக்கு பா.ஜ.க.வை விட சிறப்பாக செயல்படும் கட்சி வேறு எதுவுமில்லை என்று தெரிவித்தார். தினேஷ் மோங்கியா மட்டுமின்றி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதே சிங் பஜ்வா, பல்வேந்தர் சிங் லடி, மாநிலத்தின் முன்னணி கிறிஸ்துவ தலைவர் கமல் பக்ஷி, ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதுமீத், கார்ப்பரேட்டர் ஜக்தீப் தலிவால் மற்றும் முன்னாள் எஸ்.ஏ.டி. எம்.எல்.ஏ. குர்தேஜ் சிங் குடியானா மற்றும் அகாலி தளம் மூத்த தலைவர் ராஜ்தேவ் சிங் கல்சா ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.