"இந்துத்துவாவின் ஃபர்ஸ்ட் டார்கெட் முஸ்லீம்கள்; இப்போ கிறிஸ்டீன்ஸ்" - ப.சிதம்பரம் ஆவேசம்!
மத்தியில் ஆளும் பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கிறிஸ்தவ மிஷனரிகள் மீது கட்டம் கட்ட தொடங்கியது. மிஷனரிகளின் உரிமத்தை ரத்து செய்வது. வெளிநாடுகளிலிருந்து வரும் முறையான நிதியைக் கூட தடுப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளை ஒழித்துக் கட்டியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் சரியா என்பதை விவாதிப்பதைக் காட்டிலும், இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கு என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
மிஷனரிகள் என்றால் மதத்தைப் பரப்பும் மையங்கள், மதமாற்றம் செய்யும் முகாம்கள் என்ற தட்டையான புரிதலே நிலவுகிறது. ஆனால் அந்த மிஷனரிகளால் இந்தியா அடைந்த உயரங்கள் பல. மிஷனரிகள் நடத்தும் பள்ளிகள் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் படித்து பயனுறுகின்றனர். அவர்கள் நடத்தும் அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், சொந்த உறவினர்களே ஒதுக்கிவைக்கும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் அறக்கட்டளைகள் என பல்வேறு தொண்டுகளைச் செய்து வருகின்றன. அந்த வகையில் அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது.
இந்த மிஷனரி குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்ட ட்வீட் பெரும் புயலை கிளப்பியது. சாரிட்டியின் வங்கி கணக்குகள் அனைத்தையும் மத்திய அரசு கிறிஸ்துமஸ் நாளில் முடக்கிவிட்டது. இதனால் 22,000 பேர் உணவும் மருந்துகளும் இல்லாமல் பரிதவிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. அரசு தரப்பில் சாரிட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என்று சொன்னது.
Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresa’s Missionaries of Charity in India!
— Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021
Their 22,000 patients & employees have been left without food & medicines.
While the law is paramount, humanitarian efforts must not be compromised.
அந்நிய பணபரிவர்த்தனை சான்றிதழை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக சாரிட்டி தான் வங்கி கணக்குகளை நிறுத்திவைக்க சொன்னதாகவும் கூறியது. இச்சூழலில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைளை பிரதான ஊடகங்கள் மறைத்துவிட்டன. அது வேதனைக்குரியது, வெட்கப்பட வேண்டியது.
In the case of MoC, it reveals bias and prejudice against Christian charity work.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 29, 2021
After Muslims, Christians are the new target of the Hindutva brigade.
அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரும்போது, அதை அமைச்சகம் நிராகரித்தது என்பது இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் எளியவர்களுக்காக மகத்தான சேவை செய்துவரும் என்ஜிஓ-களுக்கு எதிரான தாக்குதல். இந்த விவகாரத்தில், கிறிஸ்தவ தொண்டுப் பணிக்கு எதிராக பாகுபாட்டுடன், முன்முடிவுடன் மத்திய அரசு நடப்பது தெளிவாக தெரிகிறது. இஸ்லாமியர்கள் முதலில் குறிவைக்கப்பட்டார்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.