“எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதை தவிர வேறு எந்த திறமையும் பழனிசாமியிடம் இல்லை”
எடப்பாடி பழனிச்சாமி யாருடனமே இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ ரெத்னசபாபதி, “சசிகலாவை ஒதுக்கி வைத்த போதே நான் எதிர்ப்பு குரல் கொடுத்தவன். டிடிவி தினகரன் விலகும்போது கூட அவரை விலக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உடன் நேரடியாக வாக்குவாதம், விவாதம் செய்தேன். அதிமுக ஒன்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி எதிர்காலம் என்பதில் உறுதியாக உள்ளேன். அதிமுக ஒன்று சேரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதிமுகவை ஒருங்கிணைப்போம் என்று சசிகலா நல்லெண்ணத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி மற்றும் அவரை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உள்ளோம்.
எடப்பாடி பழனிச்சாமி யாருடனமே இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர். சட்டமன்ற உறுப்பினர்களையும் மாவட்ட செயலாளர்களையும் விலை கொடுத்து வாங்கி வைத்து கொள்ளக்கூடிய திறமையை தவிர வேறு எந்த திறமையும் கிடையாது. கட்சியை ஒற்றுமையாக அழைத்துச் செல்லக்கூடிய தகுதியும் அவரிடம் கிடையாது” என்று தெரிவித்தார.