"அடுத்து ஆட்சி பாமக ஆட்சி தான்... அதற்கான முன்னோட்டம் தான் இது" - அன்புமணி அதிரடி பேச்சு!

 
anbumani

தமிழகத்தில் அடுத்த ஆட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி தான் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ஆம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. இதுவரை கூட்டணி அமைத்தே போட்டுயிட்டு வந்த பாமக திடீரென உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், கட்சியின் வளர்சிக்காக மட்டுமே கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பாமக திட்டவட்டமாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

anbumani

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அங்கு பாமக சார்பில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரத்தை அடுத்த அவலூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி பாமக. அதற்கான நேரம் இது. பல ஆண்டுகளாக உழைத்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து விட்டார். அதிமுகவும் ஆட்சிக்கு வந்துவிட்டது. அடுத்து கட்சி பாமக தான். அதற்கான முன்னோட்டம் தான் இந்த உள்ளாட்சித் தேர்தல். 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஜாதி பிரச்சினையோ ஓட்டு பிரச்சினையோ இல்லை. இது சமூக நீதி பிரச்சனை.

மாற்றம் என்பது உள்ளாட்சி தேர்தலில் இருந்து தொடங்கட்டும். இந்த வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கே. திமுக, அதிமுக 54 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஆட்சியமைத்தது போதும். அடுத்த முறை பாமக ஆட்சிக்கு வரும் என்று கூறினார். மேலும், மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.