கோவா தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மருமகள்.. தேர்தல் போட்டியிலிருந்து விலகிய மாமனார்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்
கோவாவில் பொரியம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரசாத்சிங் ரானே தேர்தலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அவரது மருமகள் நிற்பது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கோவாவின் பொரியம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரதாப்சிங் ரானே. இவர் பொரியம் சட்டப்பேரவை தொகுதியில் 11 முறை வெற்றி பெற்றுள்ளார். இதுவரை இந்த தொகுதியில் 87 வயதான பிரதாப் சிங் ரானே தோல்வியை சந்தித்தது கிடையாது.
இந்த சூழ்நிலையில், பொரியம் சட்டப்பேரவை தொகுதியில் பிரதாப் சிங் ரானேவுக்கு எதிராக அவரது மருமகள் ( பிரதாப் சிங் ரானேவின் மகன் விஸ்வஜீத் ரானேவின் மனைவி) தேவியா விஸ்வஜீத் ரானேவை பா.ஜ.க. நிறுத்தியது. முதலில் பிரதாப் சிங் ரானேவுக்கு எதிராக அவரது மகன் விஸ்வஜீத் ரானேவைத்தான் பா.ஜ.க. நிறுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் இறுதியில் விஸ்வஜீத் ரானேவின் மனைவியை வேட்பாளராக அறிவித்தது. அதேசமயம் பொரியம் தொகுதிக்கு அருகில் உள்ள வால்போய் சட்டப்பேரவை தொகுதியில் விஸ்வஜீத் ரானேவை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது.
பொரியம் சட்டப்பேரவை தொகுதியில் மாமாவை எதிர்த்து மருமகள் போட்டியிடுவதால் அந்த தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பிரதாப்சிங் ரானே தேர்தலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மருமகளை எதிர்த்து போட்டியிட விரும்பாததால் பிரதாப்சிங் ரானே தேர்தல் போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார் என்று பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக பிரதாப்சிங் ரானே கூறுகையில், வயது முதிர்வு காரணமாகத்தான் தேர்தலிருந்து பின்வாங்க முடிவு செய்தேன், குடும்ப அழுத்ததால் அல்ல என்று தெரிவித்தார்.