பிடிஆர் லீக்ஸ்- அதிரவைக்கும் ஆடியோ அரசியல்! மெளனம் காக்கும் மு.க. ஸ்டாலின்

 
ptr

கடந்த 2 ஆண்டுகளாக கருணாநிதியைவிட சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்கிற பாராட்டை பெற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமீபகாலமாக சில சறுக்கல்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்துவருகிறது.

ptr leaked audio clip explanation

இந்த சூழலில் DMK Files என்ற பெயரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில சொத்து விவரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்ப முயற்சித்தார். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. இந்த சூழலில்தான் வெளியானது பிடிஆர் லீக்ஸ்... 

அதாவது, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எங்கு, எப்படி பதுக்குவது என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

 இந்த உரையாடல் வெளியானது குறித்து திமுக தரப்போ.. நிதியமைச்சரோ எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர். ஆனால் சமூக வலைதளவாசிகளும், பாஜக அனுதாபிகளும் கூக்குரல் போட ஆரம்பித்தனர். இதையடுத்து விரைவில் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு வரப் போகிறாரா? விவாதிப்போம் என டிவிட்டரில் அடுத்த பதிவை போட்டு பரபரப்பை கிளப்பினார் சவுக்கு.

உடனே அதிர்ச்சியடைந்த பிடிஆர், அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், இந்த ஆடியோ ஜோடிக்கபட்டது. யார் குரலில் வேண்டுமானாலும் இப்படி பேசி வெளியிட முடியும் என்று விளக்கமளித்தார். அதுமட்டுமின்றி, என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார் என்றும் கூறினார். கர்நாடக தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை, PTR Tape-2 என்று PTR பேசியதாக மற்றொரு ஆடியோ க்ளிப்  ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். அதனையும் கேட்போம்..

இந்த உரையாடல் வெளிவந்தவுடன் அரசியல் களம் பரபரப்பானது... இது தன்னுடைய குரல் அல்ல என்று  மறுத்த பி.டி.ஆர்., நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இது போன்ற போலி காணொளிகளை எளிதாக உருவாக்க முடியும் என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டார். இதனிடையே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருந்த ஒலிநாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, தமிழக பாஜக தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

ptr audio

தொடர்ந்து பிடிஆர் சர்ச்சை சமூக வலைதளங்களில் உலாவர, பதட்டமான பிடிஆர், இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது, சபரீசன் என் வழிகாட்டி! உதயநிதி நம்பிக்கை நட்சத்திரம் என்று விளக்கம் அளித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில் பிடிஆர், உச்சக்கட்ட பதட்டத்தில் பேசுவதாகவும், முந்தைய விளக்க வீடியோவில் பிடிஆர் மேஜையில் ஸ்டாலின் புகைப்படம் இல்லை. ஆனால் தற்போது விளக்கமளித்திருக்கும் வீடியோவில் கலைஞர் சிலை மற்றும் ஸ்டாலினின் புகைப்படம் இருப்பதாக நெட்டிசன்கள் ஆருடம் செய்ய ஆரம்பித்தனர்.

தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,   பிடிஆர் தியாகராஜன் ஆடியோவை வெளியிட தயங்கிய தமிழக ஊடகங்கள் அவரின் மறுப்பை மட்டும் வேக வேகமாக வெளியிட்டு திமுகவுக்கு தங்களின் விசுவாசத்தை காட்டிக் கொள்வதாக விமரிசித்தார்.  இந்த விவகாரத்தில் அதிமுகவும் தனது பங்கிற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, ஆடியோவை ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஆடியோ விஸ்வரூபான நிலையில்,  பிடிஆர் லீக்ஸ்  இரண்டு பாகங்களுடன் நின்றுவிடுமா என்று தெரியவில்லை.. அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்படும் ஆடியோவில் இன்னும் சீரியஸான விவகாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், ஆடியோ வெளியான விவகாரம் குறித்து திமுக தலைமையோ, முதலமைச்சரோ, அமைச்சர் உதயநிதியோ அல்லது மற்ற அமைச்சர்களோ இதுவரை எந்த கருத்துக்களையோ மறுப்பையோ தெரிவிக்கவில்லை.  இந்த விவகாரத்தினால் முதல்வரின் குடும்பத்திலும், கட்சியிலும் சலசலப்பை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பாரா அல்லது மெளனத்துடனேயே கடந்து செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.