’’ராமதாஸ் வெள்ளை காக்கா பறக்கிறது என்று சொன்னால் கூட ஆமாம் என்று சொல்ல வேண்டும்’’
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவுக்கு இன்று 61-ஆவது பிறந்தநாள். இதை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வலைத்தள பக்கத்தில், ‘’மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குருவுக்கு இன்று 61-ஆவது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவர் என்னிடம் வாழ்த்து பெறும் காட்சிகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதிலும் அவர் என் மீது கொண்ட விசுவாசத்தை மாற்றிக்கொள்ளவில்லை. நான் இட்ட பணிகள் அனைத்தையும் தட்டாமல் செய்தார்.
அவருக்கு நானும் அளவற்ற அன்பையும், நிகரற்ற அங்கீகாரத்தையும் வழங்கினேன். அவரை நான் எனது மூத்த பிள்ளையாகவே கருதினேன்; அவ்வாறே நடத்தினேன். அவரின் நினைவுகளும், இல்லாமையும் என்னை வாட்டுகின்றன’’என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘’மாவீரன் குரு மறைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அவர் நினைவாக காடுவெட்டியில் மணி மண்டபம் அமைத்தோம்; கல்விக்கோயிலின் சட்டக்கல்லூரியில் குருவுக்கு தனி வளாகம் அமைத்தோம்; கம்பீரமான சிலையை கட்டமைத்தோம். அவற்றின் வழியாக குரு நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மாவீரன் குரு இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் நம்மை விட்டு அகலவில்லை. அவரது நினைவை எந்நாளும் போற்றுவோம். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் என்ற அவரது சபதத்தை நிறைவேற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்!’’என்று தெரிவித்திருக்கிறார்.
ராமதாசின் இந்த வலைத்தள பதிவிற்கு கமெண்ட் செய்திருக்கும் மணலூர் சுந்தர்ராஜன், ‘’1986 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட எங்களுடைய நட்பு வட்டம் என்பது ஆர்ப்பாட்டம் மற்ற அழகு வழியை கொண்டதாகும். அந்தக் காலகட்டத்தில் அவர் ஜெயங்கொண்டம் வன்னியர் சங்க ஒன்றிய அமைப்பாளராக இருந்தார். நான் திருப்பனந்தாள் வன்னியர் சங்க ஒன்றிய அமைப்பாளராக இருந்தேன்.
மக்கள் பிரச்சினைக்காக முன்னெடுத்த பல கட்ட போராட்டங்களில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அவருடன் பலமுறை இருந்த அனுபவம் எனக்கு உண்டு. எப்போது பார்த்தாலும் இன உணர்வு சம்பந்தமான பேச்சு மட்டுமே அவர்களிடம் காண முடியும். அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை என்பது மருத்துவர் ஐயா அவர்கள் "வெள்ளை காக்கா பறக்கிறது" என்று சொன்னால் கூட ஆமாம் என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயம் முன்னேற்ற பாதையை நோக்கி நகருகிறது என்று அர்த்தம் என்று கூறுவார். ’’என்று பதிவிட்டிருக்கிறார்.