ராகுல் காந்திக்கு நெருக்கமான ஆர்.பி.என். சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்..

 
ஆர்.பி.என். சிங், தர்மேந்திர பிரதான்

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஆர்.பி.என். சிங் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவருமான ரத்தன்ஜித்  பிரதாப் நரேன் (ஆர்.பி.என்.) சிங் நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். ஆர்.பி.என். சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்தது தொடர்பாக சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தை பதிவேற்றம் செய்து, இன்று ஒரு நேரத்தில், நமது மாபெரும் குடியரசு உருவானதைக் கொண்டாடுகிறோம், எனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். ஜெய் ஹிந்த் என்று பதிவு செய்து இருந்தார்.

ராகுல் காந்தி

அடுத்த சில மணி நேரங்களில் பா.ஜ.க. அலுவலகத்துக்கு சென்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் ஆர்.பி.என். சிங் பா.ஜ.க.வில் இணைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் ஆர்.பி.என். சிங் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒரு சில ஆண்டுகளில் புதிய சகாப்தத்துடன் ஒருங்கிணைத்துள்ளார்.

காங்கிரஸ்

நான் ஒரு அரசியல் கட்சியில் (காங்கிரஸ்) 32 ஆண்டுகள் இருந்தேன். ஆனால் அந்த கட்சி முன்பு இருந்தது போல் இல்லை. இந்தியாவுக்கான பிரதமர் மோடியின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நான் ஒரு கார்யகர்த்தாவாக செயல்படுவேன். இந்தியாவின் இதயம் உத்தர பிரதேசம். கடந்த 7 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. எல்லோரும் அதை சான்றளிக்க முடியும். இரட்டை எஞ்சின் சர்க்கார் மூலம் உத்தர பிரதேசம் பயனடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஆர்.பி.என். சிங் பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.