எடப்பாடி பழனிசாமி 3 கொலை செய்தவர்- ஆர்.எஸ்.பாரதி
திமுகவை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "எதற்கெடுத்தாலும் திமுகவை தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது. அதிமுகவுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டம்-ஒழுங்கு எங்கும் மீறப்படவில்லை, உடனடியாக 144 போடப்பட்டது. சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
அதிமுகவின் வன்முறையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த ஈபிஎஸுக்கு தெரியாதா? ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா? அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள்.
முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், திமுகவை பற்றியும் குறை கூற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். திமுகவை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது. திமுகவை அழித்து விடுவேன் என ஜெயக்குமார் கூறுவது தவறு. வன்முறை நடக்கும் போது சீல் வைப்பது அரசின் கடமை. உங்களுக்கு வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள்.
நீதிமன்றம் அதிமுக அலுவலகத்தை திறக்கச் சொன்னால், நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என்று கூறினார். மூன்று கொலை செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் அப்படி மாறுவிடுவேன் என கூறுகிறாரா..?. எங்களை பொறுத்தவரை இப்போதும் அதிமுக எங்களுக்கு பங்காளி.. பாஜக பகையாளி என்பது தான் நிலைப்பாடு. ஓபிஎஸ் எங்களுக்கு ஏன் ஆதரவாக செயல்பட வேண்டும். கொடநாடு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் வழக்கு இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரும்" எனக் கூறினார்.