திப்பு சுல்தானை புகழ்ந்து பேசிய ஜனாதிபதியையும் பதவி விலக சொல்வீங்களா?.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா
திப்பு சுல்தானை புகழ்ந்து பேசியதற்காக குடியரசு தலைவரையும் பதவி விலக சொல்வீர்களா என்று பா.ஜ.க.வுக்கு சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் மலாட் விளையாட்டு வளாகத்திற்கு திப்பு சுல்தானின் பெயரை சூட்டியதற்காக ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தன. இதற்கு, கர்நாடகாவில் திப்பு சுல்தானை புகழ்ந்து பேசியதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. கோருமா? என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் பதிலடி கொடுத்தார்.
சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கர்நாடகா சென்ற போது, திப்பு சுல்தான் ஒரு வரலாற்றுப் போராளி, சுதந்திர போராட்ட வீரர் என்று புகழ்ந்தார். எனவே குடியரசு தலைவரின் பதவி விலகலையும் கோருவீர்களா? இதை பா.ஜ.க. தெளிவுப்படுத்த வேண்டும். இது நாடகம். மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாதி அரசு முடிவெடுக்கும் திறன் கொண்டது.
டெல்லியில் வரலாற்றை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்யலாம். ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். வரலாற்று அறிவு தங்களுக்கு மட்டுமே உள்ளது என்று பா.ஜ.க. நினைக்கிறது. அனைவரும் புதிய வரலாற்றை எழுத அமர்ந்துள்ளனர், இந்த வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை மாற்றியிருக்கிறார்கள். திப்பு சுல்தானை பற்றி எங்களுக்கு தெரியும். பா.ஜ.க.விடம் கற்றுக்கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.