மக்களுக்கு பிரச்சினையே காங்கிரஸ் தான்! வம்பிழுக்கும் சீமான்
இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏதாவது மக்கள் பிரச்சினைக்காக போராடி உள்ளதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த ராஜீவ் காந்தி நகர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக தனிநபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அப்பகுதியில் குடியிருக்கும் சுமார் 450க்கும் மேற்பட்டோரை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் இன்று திடீரென்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி நகர் பகுதிக்கு வருகை தந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்பகுதியில் சுமார் 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை அமைத்தது யார்? மின் இணைப்பு, குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை இதையெல்லாம் கொடுத்தது யார் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யும் போது அரசு அதிகாரிகள் தடுக்காமல் என்ன செய்தனர் எனவும், வரும்போது விடியல் அரசு, விடியல் அரசு, விடியல் அரசு என கூறினர் வந்த பிறகு இடியல் அரசாக உள்ளது.
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவது குறித்து கேட்டபோது, காங்கிரசுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. இதுவரை தமிழர் நிலத்திற்குள் காங்கிரஸ் கட்சியினர் ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனைக்கு போராட்டம் நடத்தி உள்ளதா எனவும், மக்களுக்கு பிரச்சினையே காங்கிரஸ் தான் எனவும், இந்த தீர்ப்பே மீதி இருப்பவர்களின் விடுதலைக்கு போதுமானது தான் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதையொட்டியே அவர்களை விடுதலை செய்யலாம் எனவும், இதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.