சீமானின் ‘முதலியார்’பேச்சு! விரட்டியடித்த அருந்ததியர்கள்
பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலியார் சாதியை உயர்த்தி பிடித்து சீமான் பேசிய பேச்சினால் அவரது கட்சி வேட்பாளரை நாங்கள் வந்தேரிகளா என்று ஆத்திரமடைந்து ஆவேசப்பட்டு விரட்டி அடித்திருக்கிறார்கள் அருந்ததியர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அவரை ஆதரித்து சீமான் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் . பிரச்சாரத்தின் போது சாதிய அடிப்படையில் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அருந்ததியர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரச்சாரத்தில் பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள் . அதனால்தான் அவர்கள் முதலியார் என்று அழைக்கப்பட்டார்கள் என்றார்.
அவர் மேலும், இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் போல் விஜயநகர பேரரசு ஆட்சியிலும் தூய்மை பணியை செய்ய வேண்டும் என்று சொன்னபோது , போடா வேற ஆளப் பாரு என்று சொல்லிவிட்டார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள் தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என்று சீமான் பேசினார்.
சீமானின் இந்த பேச்சுக்கு அருந்ததியர் இடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த அருந்ததியர்கள் நாங்கள் தெலுங்கு வந்தேரிகளா என்று கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா இன்று அருந்ததியர் பகுதிக்குள் வாக்கு சேகரிக்க சென்ற போது, அப்பகுதி மக்கள் எங்களை தெலுங்கு வந்தேறிகள் என்று சீமான் சொல்லுகிறார். நீங்க எப்படி இங்கே ஓட்டு கேட்டு வரலாம் என்று ஆத்திரப்பட்டு வாக்கு சேகரிக்க விடாமல் அவர்களை திரும்பிப் போக வைத்துள்ளார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா அருந்ததியர்களை இழிவாக கீழ்த்தரமாக பேசியுள்ளார். இன்று காந்தி நகரில் பிரச்சாரம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரையும் ஆதரவாளர்களையும் பொதுமக்கள் விரட்டியடித்தனர். pic.twitter.com/AWsmlB9yM7
— Kovai Harish (@KovaiHarish) February 17, 2023