10 நாட்களில் கூட்டணியை மாற்றிய கட்சி பாமக: செல்லூர் ராஜூ
நாடாளுமன்ற தேர்தலில் 10 நாட்கள் முன்பு வரை, பாமக எங்களுடன் கூட்டணி என பேசிக்கொண்டிருந்தனர், பின் 10 நாட்களில் கூட்டணியை மாற்றியது பாமக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “செல்லூர் பகுதியில் சுணக்கமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கால்வாய்களை தூர்வாரும் மாநகராட்சி ஏன் அதை மழை காலத்திற்கு முன்பே மேற்கொள்ளாதது ஏன்?” என்றார்.
2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “கூட்டணி ஆட்சி குறித்து இப்போது சொல்ல முடியாது. பாமக நாடாளுமன்ற தேர்தலில் 10 நாள் முன்பு வரை எங்களுடன் கூட்டணி என பேசிக் கொண்டிருந்தனர். பின், சட்டென்று கூட்டணி மாறி விட்டது.டாக்டர் இன்று பேசுகிறார். கூட்டணி என்பது கொள்கை முடிவு அல்ல இது. தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம்” என்றார்.