கடந்த 6 ஆண்டுகளாக தேசிய விருதுகளை ஏற்க மறுப்பது அதிகரித்து வருகிறது.. பா.ஜ.க. அரசை தாக்கிய சிவ சேனா

 
பா.ஜ.க.

கடந்த 5-6 ஆண்டுகளாக தேசிய விருதுகளை ஏற்க மறுத்து வருவது அதிகரித்து வருவதாக மத்திய பா.ஜ.க. அரசை சிவ சேனா மறைமுகமாக தாக்கியுள்ளது.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்  உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை ஏற்க மறுத்து விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 5-6 ஆண்டுகளாக தேசிய விருதுகளை ஏற்க மறுத்து வருவது அதிகரித்து வருவதாக மத்திய பா.ஜ.க. அரசை மறைமுகமாக சிவ சேனா தாக்கியுள்ளது.

புத்ததேவ் பட்டாச்சார்யா

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா ஒரு பெரிய தலைவர். புத்ததேவ் பட்டாச்சார்யா போன்ற தலைவர்கள் உயிருடன் இருக்கும் போது மரியாதை பெறுவது மட்டுமல்லாமல் இறந்த பிறகும் நேசிக்கப்படுகிறார்கள். மேலும் 3 பேர் இந்த விருதுகளை மறுத்துள்ளனர். விருது மறுப்பது கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

சஞ்சய் ரவுத்

குலாம் நபி ஆசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் அதை  ஏற்றுக்கொண்டார். இது ஒரு நல்ல விஷயம். புத்ததேவ் பட்டாச்சார்யா பத்ம பூஷனை நிராகரித்தார். இதை பற்றி எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும். அவர்களது கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது, அது பற்றி மேலும் கூற முடியாது. பத்ம பட்டியலை பார்த்தபோது, பாலாசாஹேப் மிகவும் நேசிக்கப்பட்டபோது அவருக்கு பத்ம விருது வழங்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்துக்களின் தலைவராக இருந்த அவர் பா.ஜ.க.வுடன் நல்லுறவு கொண்டிருந்தார். அப்படியிருக்க, பாலாசாகேப் பத்ம விபூஷணுக்கு தகுதியானவர் என்று மத்திய அரசு ஏன் கருதவில்லை?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.