காங்கிரஸ் மேலிடம் அல்ல.. பஞ்சாப் மக்கள்தான் முதல்வரை தேர்வு செய்வார்கள்.. நவ்ஜோத் சிங் சித்து
பஞ்சாப் முதல்வரை மாநில மக்கள் தான் தேர்வு செய்வார்கள், காங்கிரஸ் மேலிடம் அல்ல என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வராக வரக்கூடும் என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் வெளிவந்தன. முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்யும் என்று ஒரு கருத்து வெளிவந்தது.
இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம்தான் தேர்வு செய்யும் என்ற கருத்து குறித்து செய்தியாளர்கள் சித்துவிடம் கேட்டனர். அதற்கு நவ்ஜோத் சிங் சித்து பதிலளிக்கையில்கூறியதாவது: முதல்வர் வேட்பாளரை கட்சி (காங்கிரஸ்) மேலிடம் முடிவு செய்யாது. யார் முதல்வர் என்பதை பஞ்சாப் மக்கள் முடிவு செய்வார்கள்.
காங்கிரஸ் மேலிடமே முதல்வராக்கும் என்று யார் சொன்னது?. காங்கிரஸின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை மேலிடம் முடிவு செய்யும் என்று உங்கள் மனதில் தவறான அர்த்தத்தை வைத்துக் கொள்ள வேண்டாம். பஞ்சாப் மக்கள் எம்.எல்.ஏ.க்களை முடிவு செய்வார்கள். பஞ்சாப் மக்கள் அவர்களின் முதல்வரை முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.