அமித்ஷாவை தனியாக சந்தித்துப் பேசிய எஸ்.பி.வேலுமணி? அரசியலை பரபரப்பாக்கிய அந்த 8 நிமிடங்கள்

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தொடர்ச்சியாக பேசி வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாட்டு அரசியல் களம் இன்றிலிருந்தே பரபரப்பாக தொடங்கிவிட்டது. காரணம் தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வருகை தருகிறார். அதன் பின்னர் தலைகீழாக மாற்றங்கள் நிகழும் என்கிறார் அண்ணாமலை. அதேபோல் திமுக மட்டும்தான் எதிரி, திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது எனக் கூறுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாகக் கூடும் என்ற சூழல் நிலவுகிறது.
இதற்கு காரணம் கடந்தவாரம் சிவராத்திரிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவராத்திரி விழாவுக்கு வந்தபோது அமித்ஷாவுடன் அரசியல் விவகாரங்கள் பற்றி வேலுமணி பேசியதாகவும், அமித்ஷா, எஸ்.பி.வேலுமணி இடையேயான சந்திப்பு சுமார் 8 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வருகை தரவிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் அல்லது சந்திப்புகள் நிகழலாம் எனவும் கூறப்படுகிறது. அப்படி அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தால் அந்த அணியில் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, தமாகா உள்ளிட்டவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.