அடுத்த முதல்வர் ஈபிஎஸ்; அதிமுக அசைக்க முடியாத எதிர்க்கட்சி- எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்டத்தில் உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அதிமுகவினர் சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைக்க உள்ளார். அதிமுக உண்ணாவிரதம் குறித்து அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவை மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை, திமுக ஆட்சி விளம்பர ஆட்சியாக மட்டுமே உள்ளது. கோவையில் பல்வேறு சாலைகள் மோசமான நிலையல் உள்ளது, மழையின் போது பொதுமக்கள் சாலைகளில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவை எதிர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி மாதிரி எதிர்கட்சி தலைவர் வேறு யாரும் இல்லை. தமிழகம் முழுவதும் எந்த மூலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. இன்று வலுவான எதிர்கட்சியாக உள்ளோம். ஆனால் வேண்டுமென்றே சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். எடப்பாடியார் முதல்வரை கடுமையாக விமர்சித்தார், ஆனால் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்ற மாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் இதை எந்த கொம்பாலும் தடுக்க முடியாது. திமுகவுக்கு தைரியம் இருந்தால் இப்போது தேர்தல் வையுங்கள். நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வெற்றி பெறும். அதிமுக அசைக்க முடியாத எதிர்கட்சியாக உள்ளது.” எனக் கூறினார்.