பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகிய த.மா.கா நிர்வாகி
தமாகாவின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கௌதமன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த ஜி.கே.மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அதன்பின் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக கட்சியில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த ஜி.கே.வாசன், தற்போது பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார். இதன் காரணமாக ஜி.கே.வாசன் உடன் இருந்த நிர்வாகிகள் அதிருப்தியில் மூழ்கியுள்ளனர்.
இந்தநிலையில் தமாகாவின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கௌதமன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவதாகவும், பாஜவின் செயல்பாடுகள் & தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளதாகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை என்றும் கூறி த.மா.காவிலிருந்து மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் விலகியுள்ளார். எதிர்காலத்தில் ஜி.கே. வாசனுடன் அரசியல் ரீதியாக பயணிக்க முடியாடு என்றும் கௌதமன் கூறியுள்ளார்.